கொரோனாவை ஓரம்கட்டும் காலரா! 2 பேர் பலி – அவசர நிலையில் காரைக்கால்!

காரைக்கால் உள்பட புதுச்சேரி முழுவதும் காலரா தொற்று தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அந்த மாநில அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனாவால் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து, மெல்ல மெல்ல மீண்டு வரும் புதுச்சேரி தற்போது காலராவின் பிடியில் சிக்கி அவதிப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் பலருக்கு வாந்தி, பேதி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வந்தது. காரைக்காலில் மட்டும் 1589 பேர் வாந்து பேதி ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வயிற்றுப்போக்கு காரணமாக சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததையடுத்து, சுகாதாரத்துறையினர் அந்த மாநிலம் முழுவதும் தண்ணீரை பரிசோதனை செய்தனர். 

பரிசோதனையின் முடிவில் பெரும்பாலான தண்ணீர் மாதிரிகள் ஆரோக்கியமற்றதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பலர் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, காலரா தொற்றில் இருந்து புதுச்சேரியை காப்பாற்ற அந்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது, குறிப்பாக, அந்த மாநிலத்தின் காரைக்காலில் காலரா தொற்றின் தாக்கம் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது.

புதுச்சேரியில் காலரா பரவலைத் தடுக்கும் விதத்தில் அந்த மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று அதிகாரிகளுடன் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மாநிலத்தின் தற்போதுள்ள காலரா பாதிப்பு நிலவரங்களை கேட்டறிந்தார். பின்னர், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

இந்தசூழலில், புதுவை சுகாதாரத்துறை செயலாளர் ஸ்ரீராமுலு வெளியிட்ட அறிவிப்பில், காரைக்கால் பகுதியில் அண்மைக்காலமாக கடுமையான வயிற்றுப்போக்கு தொற்று அதிகளவில் பதிவாகி வருகிறது. பரிசோதிக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகள் திருப்திகரமாக இல்லை. சில நோயாளிகள் காலரா தொற்று உறுதியாகியுள்ளது. தினசரி மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும். இதன் காரணமாக பொதுசுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும், மாநில முதல்வர் ரங்கசாமியும் புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *