’பிரிந்தவர்களை இணைக்கும் கலையைக் கற்றவள் நான்’ – சசிகலா பேச்சு!

”பிரிந்தவர்களை இணைக்கும் கலையைக் கற்றவள் நான்” எனவும், ”அதிமுகவில் தற்போது நடப்பது  பெரிய கேலிக்கூத்தாக உள்ளது” எனவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் உள்ள தனியார் மண்டபத்தில் அண்ணா திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அதன் தலைவர் திவாகரனின் தலைமையில், சசிகலாவுடன் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து சசிகலா பேசியவை பின்வருமாறு:

“அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு விதிவசத்தால் நான் சிறைக்குச் சென்றேன். இதனால் கட்டுக்கோப்பாக இருந்த நமது கழகம் எதிரிகளின் ஆசைப்படி சிதறிப்போனது. எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் எத்தனையோ பேர் கட்சியை விட்டுப் போனாலும் கழகத்தின் வளர்ச்சிக்காக மீண்டும் அவர்களை இணைத்துள்ளோம்.

வாழ்நாள் லட்சியம்

பிரிந்தவர்களை கட்சியில் எப்படி சேர்ப்பது என்ற கலையை நான் தெளிவாகக் கற்றுக் கொண்டு விட்டேன். இரு அணிகளாக பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைத்து அவர்கள் நம் கட்சிக்காரர்கள் என்று பார்ப்போமே தவிர அவர் அந்த அணியைச் சேர்ந்தவர், அவர் இந்த அணியைச் சேர்ந்தவர் என்று என்றுமே நினைக்கவில்லை.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர். ஆனால் அவருக்கு யாரையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அனைவரையும் சமமாக பார்த்தால், யாரையும் துண்டாட மாட்டார். அதைத்தான் அன்றைக்கு நாங்கள் கண்டுபிடித்தோம். அதில் வெற்றி பெற்றோம். அனைவரையும் ஒன்றிணைத்து கழகத்தை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதுதான் என் எஞ்சிய வாழ்க்கையில் லட்சியமாக கருதுகிறேன்.

எம்ஜிஆர் ஜெயலலிதா வருத்தத்துடன் பார்ப்பார்கள்…

பெங்களூரில் இருந்து வந்த நாள் முதல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தை தான் தற்போது வரை வலியுறுத்தி வருகிறேன். தற்போது நடந்த நிகழ்வு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இரு பெரும் தலைவர்களும் இதனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவதா? தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதாயத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு,  நான் பெரியவன், நீ பெரியவன், என்று போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவது எந்த விதத்தில் நியாயம்?

அதிமுக வரலாற்றில் இது நடந்ததில்லை…

இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவித் தொண்டர்கள் என்று எண்ணும்போது என் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அம்மாவின் மறைவுக்குப் பின் 2016 டிசம்பர் மாதம் வரை நடந்த பொதுக்குழு தான் உண்மையான பொதுக்குழு. அந்தப் பொதுகுழுவுக்கு தான் கழக சட்ட திட்ட விதிகளின்படி முறையாக அழைப்பு கொடுத்து ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆசிர்வாதத்தோடு சிறப்பாக நடைபெற்றது.

அதிமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒரு முறை கழக சட்டத் திட்டங்கள் மற்றும் விதிகளை யாருமே மாற்றியது இல்லை. ஆனால் தற்போது நடப்பது பெரிய கேலிக்கூத்தாக உள்ளது. இவர்கள் செய்கின்ற காரியங்கள் அனைத்துமே சட்டப்படி செல்லாது. இதற்கெல்லாம் விரைவில் ஒரு தீர்வு ஏற்படும், நான் இருக்கும் வரை யாராலும் இயக்கத்தை அபகரித்து விடவோ அழித்துவிட முடியாது.

விரைவில் எல்லாவற்றையும் சரி செய்து அனைவரையும் ஒருங்கிணைத்து மீண்டும் நமது இயக்கம் எந்தவித சாதி மத பேதுமின்றி, வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இன்றி அதே மெடுக்கோடும் செடுக்கோடும் பொதுப்பொலிவோடும் விளங்கும் என உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதே செல்லாது என்றபோது, அவர் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது எப்படி செல்லும் என சசிகலா கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *