ஓபிஎஸ்.,யை ஓரங்கட்ட 16 தீர்மானங்கள் ரெடி…
‛‛புரட்சித் தலைவர் வழியில் , மாண்புமிகு அம்மா அவர்களுடைய ஆட்சியின் சாதனைகளும் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் செயல்பட மாண்புமிகு அம்மா அரசின் வரலாற்று வெற்றிகளும்…’’
வரும் ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு நடத்த இபிஎஸ் தரப்பு ஏற்பாடு செய்து வரும் நிலையில், அதில் நிறைவேற்ற தயாரிக்கப்பட்டிருக்கும் 16 தீர்மானங்களை பிரத்யேகமாக வெளியிடுகிறது ஏபிபி நாடு. இதோ அந்த தீர்மானங்கள் விபரம்:
23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 2190 கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டுக் கோரியபடி, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 11.07.2022 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
01.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவில் இயற்றப்பட்ட, கழகத்தின் சட்ட திட்டத் திருத்தங்கள், 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால், கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கழக சட்ட திட்ட விதி – 20ஆ, பிரிவு – 7ன்படி, மேற்கண்ட நிலை உருவானதால், ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் கழக நியமிக்கப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் கழகப் பணிகளை தொடர்ந்து ஆற்றி வருகிறோம்.
இந்நிலையில், கழகப் பொதுக்குழு உறுப்பினர்களில், ஐந்தில் ஒரு பகுதி (1/5) எண்ணிக்கையினர், கழகப் பொதுக்குழு கூட்டத்தை, கழக சட்ட திட்ட விதி – 19, பிரிவு 7ன்படி உடனடியாகக் கூட்டுமாறு. 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் விண்ணப்பித்ததின் அடிப்படையில் இந்தப் பொதுக்குழுவானது. கூட்டப்படுகிறது. இந்தப் பொதுக்குழுவில் தீர்மானிக்க வேண்டி பொறுண்மை விபரங்களை 2432 கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுக் கூட்டம் 11.07.2022 – திங்கட் கிழமை காலை 9.15 மணிக்கு, திருவள்ளூர் மாவட்டம், வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகள் உசேன் அவர்கள் தலைமையில் கூட்டப்படுகிறது.
கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடும், தங்களுக்கான அடையாள அட்டையோடும் தவறாமல் வருகை தந்து, உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், கண்டிப்பாக முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில், விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் பொறுண்மை விபரங்கள்:
1.கழக அமைப்புத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு
வாழ்த்துத் தெரிவித்தல்,
2. தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவி அம்மா ஆகியோருக்கு ‘பாரத் ரத்னா’ விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்.
3. கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுப்பது சம்பந்தமாக.
4. கழக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவெடுப்பது சம்பந்தமாக.
5. கழக இடைக்காலப் உள்ள கழகப் பொதுச்செயலாளரை, நடைபெற உள்ள கழக பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல் சம்பந்தமாக
6.கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்ய வேண்டுதல் சம்பந்தமாக.
7 கழகத்தின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டுதல் சம்பந்தமாக, புரட்சித் தலைவர் வழியில், மாண்புமிகு அம்மா அவர்களுடைய ஆட்சியின்
8.புரட்சித் தலைவர் வழியில் , மாண்புமிகு அம்மா அவர்களுடைய ஆட்சியின் சாதனைகளும் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் செயல்பட மாண்புமிகு அம்மா அரசின் வரலாற்று வெற்றிகளும்
9. அம்மா அரசின் மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்யும், விடியா திமுக அரசுக்குக்கு கண்டனம்.
10. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய, மக்கள் விரோத திமுக அரசுக்குக் கண்டனம்.
11.சட்டம், ஒழுங்கை பேணி காக்கத் தவறிய திமுக அரசுக்குக் கண்டனம்.
12.மேகதாது அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்,
13. இலங்கைத் தமிழர் நலன் காக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்.
14.அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசுக்கு வலியுறுத்தல்.
15. நெசவாளர்களின் துயர் துடைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்.
16.தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கழகத்தினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்குக் கண்டனம்.
குறிப்பு: அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், கழக அமைப்பு ரீதியாக உள்ள அனைத்து மாவட்டக் கழக அலுவலகங்களிலும் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னையிலும், காணொலிக் காட்சி மூலம் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த பொதுக்குழு அழைப்பிதழ் கடிதத்தில் தீர்மானங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.