நிலவு துகள்கள், கரப்பான்பூச்சிகள் ரூ.4 கோடிக்கு ஏலம்; மறுத்து முரண்டுபிடிக்கும் நாசா..!
நிலவின் துகள்கள் மற்றும் கரப்பான்பூச்சிகள் ஏலம்விடப்படுவதற்கு நாசா எதிர்ப்பு தெரிவித்துள்ளது…
1969 ஆம் ஆண்டு நாசாவின் அப்போலோ 11 மிஷனாக நிலவில் இருந்து இருந்து 47 பவுண்டுகள் (21.3 கிலோகிராம்) எடை கொண்ட பாறை பூமிக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த பாறையின் துகள்களை வைத்து நிலவின் மண் மற்றும் பாறைகளில் நச்சுத்தன்மையுள்ளதா என்ற ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சில பூச்சிகள், மீன்கள் மற்றும் பிற சிறிய உயிரினங்களுக்கு அந்த நிலவு பாறையின் துகள்கள் உணவாக அளிக்கப்பட்டன. பின்னர் அவை சாகும் வரை அவற்றை கண்காணித்தனர்.
பின்னர் அதே 1969ஆம் ஆண்டு, நிலவு தூசி ஊட்டப்பட்ட 3 கரப்பான் பூச்சிகள் மற்றும் சுமார் 40 கிராம் அளவுள்ள நிலவு துகள்கள் மினசோடா பல்கலைக்கழகத்திற்கு மேற்படி ஆராய்ச்சிக்காக கொண்டு வரப்பட்டன. அங்கு அப்போது பணிபுரிந்து வந்த பூச்சியியல் நிபுணர் மரியன் புரூக்ஸ் அவற்றை உடற்கூராய்வு செய்து நிலவு துகள்களால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
பின்னர் அந்த ஆராய்ச்சியின் முடிவில், “தொற்று கிறுமிகள் கரப்பான்பூச்சிகளின் உடலில் இருப்பதற்கான எந்த ஆதாரமும் எனக்கு கிடைக்கவில்லை. நிலவு துகள்கள் நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதற்கும், அல்லது பூச்சிகளில் வேறு ஏதேனும் மோசமான விளைவுகளை அவை ஏற்படுத்தியது என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை” என்று அறிக்கையையும் வெளியிட்டார்.
இந்த ஆய்வின் பின்னர் நிலவு துகள்களும் கரப்பான் பூச்சிகளும் நாசாவிற்கு திருப்பி தரப்படவில்லை. அதற்கு பதிலாக புரூக்ஸின் வீட்டில் அவை பத்திரப்படுத்தப்பட்டன.
இதையடுத்து 2007 ஆம் ஆண்டு புரூக்ஸ் இயற்கை ஏய்தினார், அதன் பின்னர் அவரது மகள் புரூக்ஸின் ஆராய்ச்சி பொருட்களை எல்லாம் 2010 இல் ஒருவருக்கு விற்றுள்ளார். பெயரை வெளியிட விரும்பாத அந்த நபர் புரூக்ஸின் நிலவு துகள்கள் மற்றும் 3 கரப்பான்பூச்சிகள், மற்றும் ஆராய்ச்சியின் குப்பி போன்றவற்றை ஆர்ஆர் என்ற ஏலம்விடும் பிரபல நிறுவனத்திடம் விற்று தரும்படி ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் ஆர்ஆர் ஏல நிறுவனம் ஏப்ரல் 2022ல் வெளியிட்ட ஏலம் விடப்படும் பொருட்களின் பட்டியல் மற்றும் கையேட்டில், 1969 ஆம் ஆண்டு அப்போலோ 11 மிஷனில் இருந்து நிலவின் தூசி ஊட்டப்பட்ட கரப்பான் பூச்சிகள் இடம்பெற்றிருந்தன.
மேலும் நிலவு துகள்கள் மற்றும் 3 கரப்பான்பூச்சிகளின் விலை 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படவிருந்தது குறிப்பிடதக்கது.
இதையடுத்து இந்த ஏலம் குறித்து அறிந்த நாசா தரப்பினர் அப்பொருட்கள் நாசாவிற்கு சொந்தமானது என்றும், அவற்றை ஏவம்விட முடியாது என்றும், இந்த பொருட்களை மொத்தமாக நாசாவிற்கே திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
பொருட்களின் மேலும், கரப்பான் பூச்சிகள் மற்றும் நிலவு தூசியின் சிறிய குப்பி ஆகியவை மத்திய அரசின் சொத்து என்று நாசா கூறியதைத் தொடர்ந்து ஏலப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.