“லோக் சபா தேர்தலுக்குள் சிஏஏ-வை அமல்படுத்தவேண்டும்; இல்லையெனில்..?” – பாஜக எம்எல்ஏ எச்சரிக்கை ..!
“அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் சி.ஏ.ஏ செயல்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அது செயல்படுத்தப்படாவிட்டால், அகதிகள் மத்தியில் கட்சிக்கான ஆதரவை அது பாதிக்கும்” – அசிம் சர்க்கார் பாஜக எம்.எல்.ஏ
2019-ம் ஆண்டு, டிசம்பர் 11-ம் தேதியன்று, நாடாளுமன்றத்தில் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) கொண்டுவரப்பட்டது. அப்போதே, நாடெங்கும் இருந்து சி.ஏ.ஏ-வுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தின் காரணமாக சி.ஏ.ஏ இன்னும் நாட்டில் அமல்படுத்தப்படாமல் இருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் மேற்கு வங்கத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா பெருந்தொடருக்குப் பிறகு சி.ஏ.ஏ அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். அதற்கு மேற்கு வங்கத்தின் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், சி.ஏ.ஏ-வை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் பா.ஜ.க எம்.எல்.ஏ-வான அசிம் சர்க்கார் என்பவர், `குடியுரிமை திருத்த சட்டத்தை அடுத்த லோக் சபா தேர்தலுக்குள் அமல்படுத்தாவிட்டால், அகதிகள் மத்தியில் கட்சிக்கு ஆதரவு குறைந்துவிடும்’ என்று எச்சரித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய அசிம் சர்க்கார், “அகதிகளைப் பற்றி யாராவது தீவிரமாக யோசிப்பதாக இருந்தால், அது பா.ஜ.க மட்டும்தான். மற்ற கட்சிகளெல்லாம் சி.ஏ.ஏ-வை எதிர்த்தன.
ஒருவேளை அது செயல்படுத்தப்படாவிட்டால், அகதிகள் மத்தியில் கட்சிக்கான ஆதரவை அது பாதிக்கும். அதுமட்டுமல்லாமல், அகதிகள் குடியேறியுள்ள பகுதிகளில் கட்சிக்கு ஓட்டு கேட்கவும் முடியாது” எனக் கூறினார். மேலும் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறினார்.
அசிம் சர்க்காரின் இத்தகைய பேச்சு குறித்து பேசிய மேற்கு வங்க பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா, “இது ஒரு உணர்ச்சிகரமான பேச்சு. இதுகுறித்து கட்சி அவருடன் பேசும்” எனத் தெரிவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.