தொட்டவரை விடவேவிடாது… ஆன்லைன் சூதாட்டம்.. ராஜ்கிரண் கொடுத்த வார்னிங்..

உங்கள் திரைத்துறையை சார்ந்தவர்கள் அதிகமாக இந்த விளையாட்டை விளம்பரப்படுத்துகிறார்களே என அவரிடம் வேதனைப்பட்டு பதிவிட அதற்கு ராஜ்கிரணும் பதில் அளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தால் சமூகத்தில் நிகழும் தற்கொலைகளை சுட்டிக்காட்டி ராஜ்கிரண் பதிவிட்ட நீண்ட ஃபேஸ்புக் பதிவின் கீழ்  நெட்டிசன் ஒருவர், உங்கள் திரைத்துறையை சார்ந்தவர்கள் அதிகமாக இந்த விளையாட்டை விளம்பரப்படுத்துகிறார்களே என அவரிடம் வேதனைப்பட்டு பதிவிட அதற்கு ராஜ்கிரணும் பதில் அளித்துள்ளார்.

ராஜ்கிரண் அனுப்பிய பதிலை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டாடி வருகிறார் அந்த நெட்டிசன்.

அப்படி என்ன சொன்னார் ராஜ்கிரண்?

நடிகர் ராஜ்கிரண் தனது பதிலில், ஆமாம் தம்பி. சினிமாத்துறையிலோ, அரசியல் துறையிலோ அல்லது வேறெந்த துறையிலோ பிரபலமாக இருக்கும் எல்லோருக்குமே, ஆழ்ந்த அறிதலும், புரிதலும் இருக்குமென்று ஒருபோதும் நாம் எண்ணிவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.

முன்னதாக அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், “சீட்டாட்டம்” என்பது,மிக மிக மோசமான சூது. சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம்… சீட்டாட்டத்தினால் ஏற்படும் வெறியும், போதை போன்ற மயக்கமும் அந்தப்பழக்கத்தை தொட்டவரை விடவே விடாது… சீட்டாட தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்குதயங்க மாட்டார்கள், அதற்கு அடிமையானவர்கள்… இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான், “எல்லாமே என் ராசா தான்” என்று, ஒரு படமே எடுத்தேன்… அந்தக்காலகட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது. காவல் துறை கைது செய்தால் கேவலமாகிவிடுமே என்ற பயமும் இருந்தது. ஆனால், இப்போது சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகி, “ஆன்லைன் ரம்மி” என்ற பெயரில், எந்தப்பயமுமில்லாமல் எல்லோரும் ஆடலாம் என்றாகி, ஏகப்பட்ட தற்கொலைகள் நடந்து, பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிட்டன. அரசு இதைத்தடுக்க முனைந்திருப்பது, மனதுக்கு கொஞ்சம் ஆறுதலளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

நெட்டிசன் நெகிழ்ச்சி:

இதற்கு அந்த நெட்டிசன் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து நீண்ட பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் அவர், “எண்பது தொண்ணூறுகள் தொடங்கி இன்று வரை நம்முடைய மனம் கவர்ந்த நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதராகவும் திகழும் அய்யா ராஜ்கிரண் அவர்கள் மீது எப்போதும் எனக்கு பெருமதிப்பு உண்டு. கோடி ரூபாய் தருகிறோம் எங்கள் விளம்பரப் படத்தில் நடித்திடுங்கள் என்று ஒரு பிரபல நிறுவனம் அழைத்த அந்த காலக்கட்டங்களிலேயே அதை அடியோடு மறுத்து நிராகரித்தவர் என இவரைப்பற்றி பலர் சிலாகித்து பேசியதைக் கேட்டு வியந்து இருக்கிறேன்.

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தொடர் பதிவுகளை முகநூல் வழி இட்டிடும் அவர் பதிவொன்றை நேற்று கண்ணுற்றேன்… ஆம்…. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிரான வீரியமான பதிவு அது. பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக பல முண்ணனி நடிகர்கள் அந்த ஆட்கொல்லி ஆன்லைன் விளையாட்டுக்கு ஆதரவாக பேசி விளம்பரப்படுத்த … அதே திரைத்துறையை சேர்ந்த அய்யா ராஜ்கிரண் அவர்கள் இந்த விளையாட்டுகளால் ஏற்படும் தீமைகளைப்பற்றி விரிவாக எழுதி அந்த விளையாட்டில் ஈடுபடாதீர்கள் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இதுதான் மற்ற நடிகர்களுக்கும் இவருக்கும் உள்ள வித்தியாசம். உங்கள் திரைத்துறையை சார்ந்தவர்கள் அதிகமாக இந்த விளையாட்டை விளம்பரப்படுத்துகிறார்களே என அவரிடம் வேதனைப்பட்டேன் … அதற்கு அவர் தந்திருக்கும் பதிலை அவர் படத்தோடு இணைத்துள்ளேன் பார்த்திடுங்கள். நல் மனிதருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்திடுவோம் வாரீர்…!” என்று குறிப்பிட்டு அந்த பின்னூட்டத்தின் ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளர்.

“எல்லாமே என் ராசா தான்”: நடிகர் ராஜ்கிரண் தனது எல்லாமே என் ராசா தான் படத்தில், சீட்டாட்டம் விளையாடி இழப்புகளை சந்தித்து திருந்தும் நபர் போல் நடித்திருப்பார். அதனால் அவருடைய இந்தப் பதிவு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அண்மையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை கொண்டு வருவது தொடர்பான பரிந்துரையை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *