வடகொரிய ஹேக்கர்களால் திருடப்பட்ட க்ரிப்டோகரன்சி.. சர்வதேச சரிவால் பாதிக்கப்படும் வட கொரியா!
சர்வதேச அளவில் க்ரிப்டோ கரன்சியின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக வட கொரிய ஹேக்கர்களால் திருடப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி அழிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் க்ரிப்டோ கரன்சியின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக வட கொரிய ஹேக்கர்களால் திருடப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி அழிந்துள்ளதாகவும், இதனால் வட கொரியாவுக்கு நிதி வழங்கவும், அதன் ஆயுதத் திட்டங்களை மேம்படுத்தவும் தடங்கல் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க நிதித்துறை வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளாக வட கொரியா சார்பில் உலகம் முழுவதும் க்ரிப்டோ கரன்சிகள் கொள்ளையடிக்க உதவி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் க்ரிப்டோ கரன்சி வரலாற்றிலேயே ஏற்பட்ட மிகப்பெரிய கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 615 மில்லியன் அமெரிக்க டாலர் திருடப்பட்டதில் வட கொரியாவுக்குப் பங்கு இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில். கடந்த மே மாதம் முதல் க்ரிப்டோ கரன்சியின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு காரணமாகவும், உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு காரணமாகவும், வட கொரியா ஆதரவு ஹேக்கர்களால் திருட்டுகளை அரங்கேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வட கொரியாவின் ஆயுதத் திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தென்கொரிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவின் பொருளாதார நெருக்கடியையும் மீறி, இந்த ஆண்டு இதுவரை சுமார் 620 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அந்நாடு பல்வேறு ஏவுகணைகளை சோதித்துள்ளதோடு, அடுத்ததாக அணு ஆயுத சோதனையிலும் ஈடுபடவுள்ளது.
அமெரிக்காவின் நியூ யார்க் பகுதியிலுள்ள ப்ளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனமான செயினாலிசிஸ் இந்த விவகாரம் குறித்து கூறும் போது, வட கொரியாவின் க்ரிப்டோ மதிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 170 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பில் இருந்து வெகுவாக சரிந்து தற்போது 65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதாகவுள்ளது. மேலும், இதில் கடந்த 2017 முதல் 2021 வரை ஹேக் செய்து பெறப்பட்ட பணமும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மற்றொரு ப்ளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனமான டிஆர்எம் லேப்ஸ் சார்பாக பேசிய நிக் கார்ல்சென், கடந்த 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கொள்ளையில் பல மில்லியன் டாலர்களை வட கொரிய ஹேக்கர்கள் கொள்ளையடித்திருந்தாலும், கடந்த சில வாரங்களில் அதன் மதிப்பில் சுமார் 80 முதல் 85 சதவிகிதம் வரை இழந்திருப்பதாகவும், அதன் மொத்த மதிப்பு தற்போது 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக லண்டனின் வட கொரிய தூதரகத்தில் பேசிய போது, க்ரிப்டோ கரன்சி ஹேக் செய்த விவகாரத்தில் வட கொரியாவைத் தொடர்புபடுத்துவது தவறானது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குற்றச்சாட்டுகளை வட கொரியத் தரப்பு அமெரிக்காவின் பொய்யான பிரச்சாரம் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.