அச்சமூட்டும் காலரா! காரைக்காலில் 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
காலரா நோய் பரவல் எதிரொலியால் காரைக்காலில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்
144 தடை:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்குடன் காலரா நோய் அறிகுறி தென்பட்டுள்ளத்து. இதையடுத்து காலரா நோயை கட்டுப்படுத்தும் வகையில் 114 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் பிறப்பித்துள்ளார்.
காலரா உறுதி
காரைக்காலில் சில நாட்களாக வாந்தி மற்றும் வயிற்றுப் போக்குடன் அதிகளவு நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிலருக்கு காலரா இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. காரைக்காலில் காலரா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், காரைக்காலில் காலரா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், மருத்துவமனையில் வயிற்றுப்போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் பலருக்கும் காலரா ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக, காரைக்காலில் மட்டும் சுமார் 1,589 பேருக்கு வாந்தி, பேதி மயக்கம் ஏற்பட்டு பாதிப்புக்கு ஆளாாகியுள்ளனர். புதுச்சேரி முழுவதும் காலரா தொற்று பரவியிருப்பதை அறிந்த சுகாதாரத்துறை இன்று மாநிலம் முழுவதும் பொது சுகாதா அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
*அதன்படி கொதிக்க வைத்த குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
*அனைத்து வீடுகளிலும் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும்.
* உணவு விடுதிகள், கல்வி நிலையங்கள், திருமணக்கூடங்கள், மருத்துவமனைகளில் கட்டாயம் கொதிக்க வைத்து குடிநீர் அல்லது சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் மட்டுமே வழங்கவேண்டும் என்பதை கட்டாயமாக்கி 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் மன்சூர் முஹமது பிறப்பித்துள்ளார். மேலும் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
மேலும், பொதுமக்கள் இனி வரும் நாட்களில் கொதிக்கவைத்த தண்ணீரை குடிக்கவும், சாப்பிடும் முன்பும், சாப்பிட்ட பின்பும் கைகளை நன்றாக கழுவவும், காய்களை நன்றாக கழுவி, வேகவைத்து சமைத்து சாப்பிடவும் அந்த மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் காலராவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் காலரா பாதிப்பு பரவி வருவதால் தமிழ்நாட்டிலும் காலரா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.