‘நான் அறந்தாங்கி நகரம்டா…’ `நான் மாநிலம்டா’; ஃபிளெக்ஸ் பேனர் தகராறு, பாஜக-வினரிடையே மோதல்…

`பேனரை அகற்ற நீ யாரு?’ என்று ஸ்ரீகாந்த் கேட்க, `நான் நகரம்டா’ என்று ரமேஷ் கூற, ஸ்ரீகாந்த் `நீ நகரம்னா, நான் மாநிலம்டா’ என்று சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழ்நாடு முழுவதும், பாஜக-வின் புதிய மாநில, மாவட்ட நிர்வாகிகளின் பட்டியலை மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார். பதவி பெற்ற அனைவரும் மாநிலத் தலைவரை வாழ்த்தி, வாழ்த்து பேனர்களை வைத்துவருகின்றனர். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் வாழ்த்து பேனர் வைப்பதில் பாஜக-வினருக்கிடையே நடைபெற்ற மோதல் கைகலப்பு வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வைரிவயலைச் சேர்ந்தவர் கவிதா ஸ்ரீகாந்த். பாஜக மாநில மகளிரணிச் செயலாளராக இருந்துவந்த இவருக்கு தற்போது மாநில மகளிரணிப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், புதிய பொறுப்பு வழங்கிய மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அறந்தாங்கியில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஃபிளெக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். இந்த பேனரில் பாஜக-வின் மாவட்டத் தலைவர், அறந்தாங்கி நகரத் தலைவர் உள்ளிட்டவர்களின் படங்கள் இடம் பெறவில்லை. இதில் ஆத்திரமடைந்த அறந்தாங்கி நகரத் தலைவர் ரமேஷ், தன்னுடைய ஆதரவாளர்களுடன் கட்டுமாவடி முக்கம் உள்ளிட்ட சில இடங்களிலிருந்த சம்பந்தப்பட்ட ஃபிளெக்ஸ் பேனர்களை அகற்றியிருக்கிறார்.

இது குறித்துக் கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்குத் தன் ஆதரவாளர்களுடன் வந்த பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த், அவருடைய கணவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் ரமேஷ் தரப்பிடம் இது குறித்து விளக்கம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு ரமேஷோ, “மாவட்டச் செயலாளர், நகரச் செயலாளர் ஆகியோரின் படங்கள் இல்லாததால், பேனர்களை அகற்றினோம்” என்று கூறியிருக்கிறார். `பேனரை அகற்ற நீ யாரு?’ என்று ஸ்ரீகாந்த் கேட்க, `நான் நகரம்டா’ என்று ரமேஷ் கூற, ஸ்ரீகாந்த் `நீ நகரம்னா, நான் மாநிலம்டா’ என்று சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஸ்ரீகாந்த், கையில்வைத்திருந்த சாவியால் ரமேஷின் முகத்தில் குத்தினார். இதில், ரமேஷுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து, அறந்தாங்கி காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், ஸ்ரீகாந்த், கவிதா ஸ்ரீகாந்த் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இதேபோல், நகரத் தலைவர் ரமேஷ் தகாத வார்த்தைகளில் பேசி, தன்னைத் தாக்கியதாக ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ் மீதும் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

இதற்கிடையே `நான் நகரம்டா…’, `நான் மாநிலம்டா’ என்று கூறி பாஜக நிர்வாகிகளுக்கிடையே சண்டைபோட்டுக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பாஜக தலைமைக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *