உங்களுக்கும் கலைஞருக்கும்..? – உதயநிதியிடம் “ஷாக்” கேள்வி கேட்ட 8ம் வகுப்பு மாணவி..!
தனக்கும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் என்ன தொடர்பு என்று 8ம் வகுப்பு மாணவி ஒருவர் தன்னிடம் கேட்ட சுவாரஸ்யமான நிகழ்வை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
சென்னை, திருவல்லிக்கேணியில் மாணவர்களுக்கு மெய்நிகர் மூலம் கல்வி கற்பிக்கும் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது, மாணவர்கள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் சுவாரஸ்யமான நிகழ்வொன்றை பகிர்ந்தார். அவர் பேசும்போது, “ நான் மேடையில் உட்கார்ந்திருந்தபோது அருகில் இருந்த மாணவியிடம் உன் பெயர் என்னமா? என்று கேட்டேன். அதுக்கு அவங்க என் பேரு கிறிஸ்டினா என்றாங்க. இன்னொரு மாணவிகிட்ட பேரு கேட்டேன். யாஸ்மின்னு சொன்னாங்க. எத்தனையாவது படிக்குறீங்கன்னு கேட்டேன். ரெண்டு பேரும் 8ம் வகுப்பு படிக்குறேனு சொன்னாங்க.
உடனே, கிறிஸ்டினா என்கிட்ட உங்க பேரு என்னன்னு கேட்டாங்க. என் பேரு உனக்கு தெரியாதாமான்னு கேட்டேன். அவங்க தெரியாதுன்னு சட்டுனு சொன்னாங்க. என் பேரு உதயநிதினு சொன்னேன். உடனே கிறிஸ்டினா என்கிட்ட உங்களுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம்னுன்னு கேட்டாங்க. நான்தான் அவரு பேரன்மானு சொன்னேன். அவங்க அப்படியா சரினு சொன்னாங்க.” என்றார்.
இந்த சுவாரஸ்யமான நிகழ்வை குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின் “தற்போதுள்ள மாணவர்கள் மிகவும் தெளிவாகவும், தைரியமாகவும் உள்ளனர். அந்த மாணவி என்னிடம் அப்படி கேட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற கல்விச்செல்வத்தை மாணவர்களிடம் சேர்ப்பதற்கு தி.மு.க. அரசு அரும்பாடுபட்டு வருகிறது.
ஒரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைச்சர் அன்பில் மகேஷ் செயல்பட்டு வருகிறார். அவருக்கு நான் வாழ்த்துக்களை கூறுகிறேன்” இவ்வாறு அவர் கூறினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.