அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு நான் போட்டியிடுவேன்’ – முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன்

அதிமுகவை பொறுத்தவரை எவருக்கும் பொறுப்பில்லை. அனைவரும் தொண்டர்கள் தான் – அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் பேட்டி

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அதிமுக  பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஒ.பன்னீர்செல்வம் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார். அதன்பின்னர், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த சூழலில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உத்தரவை மீறியதாகவும் மேல்முறையீட்டு மனுவை சண்முகம் தாக்கல் செய்திருந்தார். 

மேலும் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, வழக்கில் தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என்ற இடைக்கால உத்தரவு ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டும் பொருந்தும். அதன்பின் நடக்கும் பொதுக்குழுக்களுக்கு அல்ல. இதனால் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோர முடியாது. ஜூலை 11 ந்தேதி அதி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி தனி நீதிபதியை அணுகும்படி ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம்  அறிவுறுத்தியது. மேலும் வழக்கை ஒத்திவைக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க நீதிபதிகள் வழக்கை வரும் 7 ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதனை தொடர்ந்து அதிமுக ஒற்றை தலைமையை எடப்பாடி பழனிசாமி தான் ஏற்கவேண்டும் என பெரும்பான்மையான தொண்டர்கள் தெரிவித்து வருவதாக அதிமுக முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறியது, அதிமுக கொள்கைபடி, தொண்டர்களால் தேர்ந்தெடுக்கும் நபர்  ஒற்றைத் தலைமையேற்கட்டும். இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் மட்டுமே தான் அதிமுகவா? புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர்களால் கட்டிகாப்பாற்றபட்ட இயக்கம் அதிமுக. மேலும், எம்.ஜி.ஆரின் உயில்படி தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். அதிமுக தொண்டர்களின் கட்சி ஆகும். தனிநபர்களுக்கு சொந்தம் இல்லை என்றார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உயிரோடிருந்தால், தற்போதைய அதிமுகவின் நிலையை கண்டு கண்ணீர் வடிப்பர். மேலும் இரட்டைத் தலைமை வேண்டுமென தீர்மானம் போட்டவர்களே, இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்கின்றனர். எம்.ஜி.ஆர் எழுதிய உயில் நீதிபதி ஹரி பரந்தாமனிடம் உள்ளது. அதை வைத்து உச்சநீதிமன்றம் வரை செல்வேன். இன்றைய தேதியில் அதிமுகவில் எவருக்கும் பொறுப்பில்லை. அனைவரும் தொண்டர்கள் தான். நான் யாருக்கும் ஆதரவு இல்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு நானே கூட போட்டியிடுவேன்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *