“முடிவெடுக்க வேண்டியது இபிஎஸ், ஓபிஎஸ் அல்ல; அவர்கள்தான்.” – முத்தரசன்..!

”எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் சுயமாக சிந்தித்து அதிமுக செயல்பட்டது, அவர்களது மறைவுக்குப் பின்னர் அதிமுக சுயமாக செயல்படவில்லை”

நெல்லையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,  “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு வரும் 6 முதல் 9 வரை திருப்பூரில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் டி.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். மாநட்டில் தேசிய மாநில சமூக பிரச்சினை, குறித்து விவாதம் செய்யப்பட்டு பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இறுதி நாள் நிகழ்ச்சி செந்துண்டர் அணிவகுப்பு மற்றும் சீருடை அணிந்த மகளிர், இளம்பெண்கள் கலந்து கொள்ளும் பேரணி நடைபெறுகிறது.

இறுதி நாளான ஆகஸ்ட் 9 ல் வெள்ளையனே வெளியேறு முழக்கம் எழுந்த நாள். அன்றைய தினத்தில்  மக்கள் விரோத , பாசிச மோடி அரசே  வெளியேறு  என்ற முழக்கங்களை முன்வைத்து மாநாடு நடக்கிறது. மத்திய அரசு 8 ஆண்டுகாலத்தில் சொன்ன வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. மாறாக மக்கள், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களையே கொண்டு வந்துள்ளனர். அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததில் இருந்து நாடே தீப்பற்றி எரிந்து வருகிறது. 17 வயதில் பணியில் சேரலாம் என்ற அக்னிபாத் திட்டம் இளைஞர்களை ஏமாற்றும் திட்டம். இந்த திட்டத்தை கைவிட வேண்டும் இது நல்ல திட்டமில்லை. இளைஞர்களை எந்த அரசியல் கட்சிகளும் தூண்டவில்லை. தானாக அவர்கள் போராடுகிறார்கள்.

இளைஞர்களின் வேலை நெருக்கடியை மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தின் மூலம் பயன்படுத்தி கொள்கிறது. 4 ஆண்டுகள் பணி முடித்து வெளிவந்த இளைஞர்களின் நிலை கேள்விகுறியாகும் சூழல் நிலவிவருகிறது. ராணுவத்தில் ஆள் சேர்க்க பின்பற்றபட்டு வந்த பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். அக்னிபாத் திட்ட பிரச்சனை குறித்து ராணுவ தளபதிகள் தலையிட்டு கருத்துகள் சொல்வது தவறாகும். எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து குடியரசு தலைவர் தேர்தலில் செயல்பட்டால் பாஜக அரசின் வேட்பாளரை தோற்கடிக்க முடியும். இது 2024 ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மிகப்பெரிய பயனளிக்கும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்துள்ளது. இந்த விசயத்தில் நிதி அமைச்சர் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை. குடும்ப தலைவிகளுக்கு ₹1000 மாதம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என தொடர்ந்து இந்திய கம்யூ கட்சி அதனை வலியுறுத்தும்

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் சுயமாக சிந்தித்து அதிமுக செயல்பட்டது. அவர்களது மறைவுக்குப் பின்னர் அதிமுக சுயமாக செயல்படவில்லை. குறிப்பாக ஓபிஎஸ் இரண்டு நாட்களுக்கு முன் சொல்லும் போது கூட நான் துணை முதலமைச்சராக பதவியேற்க மாட்டேன் என உறுதியாக இருந்தேன். மோடி சொல்லி தான் ஏற்றுக் கொண்டேன் என அவரே சொல்லியுள்ளார். அதிமுகவின் ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என முடிவெடுக்க வேண்டியது ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.,அல்ல. அவர்களை யார் இயக்குகிறார்களோ அவர்கள் முடிவெடுப்பார்கள்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *