“அக்னிபாத்..” அடங்காத போராட்டம்.. மருத்துவமனையிலிருந்து சோனியா காந்தி உருக்கமான கோரிக்கை

டெல்லி: அக்னிபாத் திட்டம் குறித்த ஒவ்வொரு புது புது அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் போராட்டத்தை அறிவித்துள்ளது.. இதில், அக்னிவீரர்களுக்கு துணையாக இருப்போம் என்று உறுதி கூறியுள்ள சோனியாகாந்தி, வன்முறையில் இளைஞர்கள் யாரும் இறங்கிட வேண்டாம் என்று மருத்துவமனையில் இருந்து உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.. ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் புதிய திட்டம்தான் இந்த அக்னிபாத் எனப்படுவது.

ஆனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது… காரணம், 4 வருடங்களுக்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படும் என்கிறார்கள்.

தற்கொலைகள் அதனால், வடமாநிலங்களில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.. பீகார், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் போராட்டங்கள் 4வது நாளாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.. தென் மாநிலங்களான தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது… போராட்டக்காரக்ளை போலீசாரும் கைது செய்து வருகின்றனர்.

அனலடிக்கும் மாநிலங்கள் இந்த போராட்டங்களின்போது பீகார், உபி., தெலங்கானாவில் 4 ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும், ஒடிசா மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த 2 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டனர்… தெலங்கானாவில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்… மத்திய அரசின் ஒரு அறிவிப்பானது, போராட்டங்களையும் தாண்டி, உயிரிழப்புவரை கொண்டு சென்று விட்டுள்ளது, நாடு முழுவதும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

ஷாக்கில் பாஜக இளைஞர்களின் எழுச்சியை பார்த்ததும் மிரண்டு போன மத்திய அரசு, இந்த திட்டத்தில் சேருவதற்கான இளைஞர்களின் உச்சவரம்பை 21 யிலிருந்து 23 ஆக உயர்த்தியது.. மேலும் இந்த திட்டம் இளைஞர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது என்று விளக்கம் ஒன்றும் தரப்பட்டது.. ஆனாலும், இளைஞர்கள் தங்கள் முடிவில் பின்வாங்கவில்லை. இதுவும் பாஜகவுக்கு ஷாக்தான்.. எனவே, “மத்திய ஆயுத படை மற்றும் அசாம் ரைபிள் பிரிவிலுள்ள காலியிடங்களில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது புதிதாக முடிவு செய்துள்ளது…

கொந்தளிப்பு அக்னி வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பிலிருந்து 3 வருடங்கள் தளர்வுகள் வழங்கவும் மத்திய அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.. முதல் பிரிவு அக்னி வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது உச்ச வரம்பிலிருந்து 5 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.. இதுவும் எந்த அளவுக்கு பலன் தரப் போகிறது என்று தெரியவில்லை.. எனினும் எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளன.. காங்கிரஸ் இது விஷயத்தில் தீவிரம் காட்டி வருகிறது..

சத்தியாகிரக போராட்டம் நாளைய தினம் போராட்டத்தை அறிவித்துள்ளது… தெருக்களில் இறங்கி போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தருவதற்காகவே இந்த போராட்டத்தை காங்கிரஸ் முன்னெடுக்கிறது.. டெல்லி ஜந்தர் மந்தரில் சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என்றும், அமைதியான முறையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் அனைத்து காங்கிரஸ் எம்பிக்கள், நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது… இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு முக்கிய வேண்டுகோளை இளைஞர்களுக்கு விடுத்துள்ளார்..

வேண்டுகோள் “இளைஞர்களே, வன்முறை வேண்டாம்.. இளைஞர்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம்” என்று உறுதி தெரிவித்துள்ளார்.. அத்துடன், இளைஞர்களின் குரலை அரசாங்கம் ‘புறக்கணித்தது’ துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள சோனியா, இளைஞர்களும், தங்கள் கோரிக்கைகளுக்காக போராட அமைதியான, வன்முறையற்ற வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்..

மூக்கில் ரத்தம் கொரோனா பாதித்த நிலையிலும், மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததாக சொல்லப்பட்ட நிலையிலும், தீவிர சிகிச்சையில் சோனியா இருந்து வருகிறார்.. அப்படி இருந்தும், இளைஞர்களிடம் அவர் உருக்கமாக கேட்டுக் கொண்ட வேண்டுகோள் முக்கியத்துவம் பெற்று வருகிறது.. அதுவும் இல்லாமல் நாளைய தினம் சத்தியாகிரக போராட்டம் என்பதால், அமைதியான வழியிலேயே எதிர்ப்பை பதிவு செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளதும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *