என் மீது நடவடிக்கையா? இந்த பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டேன்: ஜெயக்குமார்…
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொண்டர்களின் மனநிலையை வெளிப்படுத்தினேன். நடவடிக்கை என்னும் பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படமாட்டேன் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Jayakumar says won’t fear, if party action against me: ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க தொண்டர்களின் மனநிலையைத் தான் வெளிப்படுத்தினேன் என்றும், தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் பயப்படமாட்டேன் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகின்றனர். இந்தநிலையில், கட்சியின் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை இறுதி செய்ய தீர்மான குழு இன்று கூடியது. இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜெயக்குமார், வைகைச்செல்வன், பொன்னையன், வளர்மதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்துக் கொண்டு தீர்மானங்களை இறுதி செய்தனர். கூட்டம் முடிந்து, அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வெளியில் வரவிடாமல் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை, மூன்றாவது நாளாக இன்று தீர்மான குழு கூடி இறுதி செய்துள்ளது. இது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தீர்மானங்களைப் பொறுத்தவரை, தமிழக மக்களின் நலன் சார்ந்ததாகவும், தி.மு.க ஆட்சியின் அவல நிலையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் என்று கூறினார்.
அடுத்ததாக, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் சுமுக முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டப்போது, அது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். இந்த விவகாரத்தில் அ.தி.மு.க தொண்டர்களின் மனநிலையை, மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படுத்தினர். அதை தான் நான் வெளிப்படுத்தினேன். நான் சொன்னது சிதம்பர ரகசியம் கிடையாது. எல்லோருக்கும் தெரிந்தது தான். பெரும்பாலான நிர்வாகிகள் ஒற்றைத் தலைமை வேண்டும் என வலியுறுத்தினர், என்று கூறினார்.
உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்டப்போது, இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டேன் என சிரித்துக் கொண்டே சொன்னார் ஜெயக்குமார். பின்னர், எனக்கு பதவி வெறி கிடையாது, கட்சி நலனுக்காக அடிமட்ட தொண்டனாக இருந்து வேலை செய்வேன் என்றும் ஜெயக்குமார் கூறினார்.