உதய்ப்பூர் படுகொலை: தூக்கு தண்டனை கோரி, அனுமன் சாலிசாவைப் பாடி இந்து அமைப்புகள் ஊர்வலம்..
ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் பகுதியில் தையல் கடைக்காரர் கண்ணையா லால் படுகொலையைக் கண்டிக்கும் விதமாக நேற்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அமைதி ஊர்வலம் ஒன்றை சர்வ ஹிந்து சமாஜ் அமைப்பினர் நடத்தினர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் பகுதியில் தையல் கடைக்காரர் கண்ணையா லால் படுகொலையைக் கண்டிக்கும் விதமாக நேற்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அமைதி ஊர்வலம் ஒன்றை சர்வ ஹிந்து சமாஜ் அமைப்பினர் நடத்தினர்.
இந்த அமைதி ஊர்வலத்திற்குப் பிறகு, சாலையில் இருந்த ஆயிரக்கணக்கானோரும் ஹனுமான் சாலிசா பாடினர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அமைதி ஊர்வலத்தில் குவிக்கப்பட்டதோடு, நகரத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சர்வ ஹிந்து சமாஜ் அமைப்பினர் நேற்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கடையடைப்பு அறிவித்திருந்த நிலையில், சிறுபான்மையினர் அதிகம் வாழும் அஜ்மீர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
எனினும் படுகொலை நடந்த உதய்பூரில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ஜெய்ப்பூரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பாடி சௌபர் பகுதியில் போராட்டம் நடத்துவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கூட்ட நெரிசல் காரணமாக ஸ்டேட்சூ சர்க்கிள் பகுதியில் நடத்தப்பட்டது.
விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் முதலான இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
ராஜஸ்தான் மாநில பாஜகவைச் சேர்ந்த எம்.பி ராம்சரண் போரா, எம்.எல்.ஏ கலிசரண் சரப், பாஜக மாவட்ட தலைவர் ராகவ் ஷர்மா முதலானோரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பெருவாரியான மக்கள் முழக்கங்கள் எழுப்பியதோடு, கண்ணையா லால் படுகொலையின் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையாக அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். மேலும், வாகனங்களின் நடமாட்டமும் தடை செய்யப்பட்டது.
உதய்பூர் படுகொலையைக் கண்டித்து பல்வேறு இந்து அமைப்புத் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும், கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனப் பெண்கள் முழக்கமிட்டனர். தாலிபான் கலாச்சாரம், இஸ்லாமிய மதவெறி முதலானவற்றைக் கண்டித்து பதாகைகள் ஏந்தப்பட்டன.
கடந்த ஜூன் 28 அன்று, ராஜஸ்தானின் உதய்பூர் பகுதியில் தையல்கடைக்காரர் கண்ணையா லால் இரண்டு நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர் நுபுர் ஷர்மா அவதூறாகப் பேசிய விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக பதிவிட்டதாகக் கூறி, கண்ணையா லால் கொல்லப்படார். இந்தக் கொலை விவகாரத்தில் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 3 அன்று கைது செய்யப்பட்டவர்களை ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் பெரியளவிலான கூட்டமாக பலரும் தாக்கியது குறிப்பிடத்தக்கது.