தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகத்திலும் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் – உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி..!
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, மனிதர்களை மனிதராக மதிக்க வேண்டும் என்பதை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வலியுறுத்தி நடைமுறைப்படுத்தினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி 99வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் பல்கலைக்கழகத்தில் கலைஞர் தமிழர்கள் புகழ்வானம் என்ற கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “பட்டதாரிகளில் 75 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். திராவிட இயக்கத்தின் உச்சமாக இதை பார்க்க முடியும். கலைஞரின் அயராத முயற்சியால் உயர்கல்வித்துறை பிரம்மாண்டமாக உயர்ந்திருக்கிறது. வருகிற இளைஞர்களை சமூக நீதி கொள்கைகளைப் பற்றியும், சமூக நீதி பரவுகிற காரணமாக இருக்கிற திராவிட இயக்கங்களை பற்றி தெரிந்து கொள்ள கலைஞர் ஆய்வு மையம் செயல்பட வேண்டும். குறிப்பாக கல்லூரி மாணவிகள் திராவிட இயக்கங்கள் மற்றும் சமூக நீதிக் கொள்கையை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். கலைஞரின் ஆய்வு மைய சடங்கிற்காக சம்பிரதாயத்திற்காக செயல்படுவதற்கல்ல. கலைஞரின் வரலாறு மட்டுமல்ல. கலைஞரின் தொண்டுகள், திரைப்படக் கலை தொண்டுகள், எழுத்தாளராக, அமைச்சராக, ஆட்சியாளராக அவர் செய்த அனைத்தையும் பதிவு செய்து மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆணும் பெண்ணும் சமம். பெண்கல்வி முக்கியம் என்று பெரியார் சொல்லாவிட்டால் இவ்வளவு பெண்கள் இப்போது கல்வி கற்று இருக்க முடியாது. திராவிட மாடல் என்பதை கிண்டல் செய்பவர்கள் இருக்கிறார்கள். இப்போது பெண்கள் அதிகளவில் படிக்க காரணம் தந்தை பெரியார்தான் காரணம். கல்விக்காக திராவிட இயக்கம் ஆற்றிய பணிகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வரலாறு முக்கியம். எத்தனை இசம் இருந்தாலும், மானுடவியலுக்காக குரல் கொடுத்த ஒரே இயக்கம் திராவிட இயக்கம் மட்டும்தான். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, மனிதர்களை மனிதராக மதிக்க வேண்டும் என்பதை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வலியுறுத்தி நடைமுறைப்படுத்தினர்.
கலைஞர் மாணவராக இருந்தபோது செய்ததை எண்ணிப்பார்க்க வேண்டும். 6-ம் வகுப்பில் சேர திருவாரூர் வந்தபோது அனுமதி மறுக்கப்பட்டது. எதிரில் இருக்கும் குளத்தில் குதித்து விடுவேன் என்ற சொன்னபிறகு அனுமதி கிடைத்தது. ஒரு கிலோமீட்டர் தூர குளத்தை பாதி கடந்த பிறகு, உடன் வந்த நண்பர் திரும்ப செல்ல நினைத்த போது, இரண்டும் ஒரே தூரம் தான் என முழுமையாக கடந்தவர் கலைஞர். கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. திராவிட இசம் எனும் மனிதாபிமானத்தை விட்டு விடாதீர்கள். இளைஞர்களிடம் இதை அதிகம் சொல்ல வேண்டும். புதிய கல்வி கொள்கையில் 3-ம் வகுப்பில் நுழைவுத் தேர்வு, 5-வது மற்றும் 8-ம் வகுப்பில் பொதுத்தேர்வு என உள்ளது. அதனால்தான், தமிழகத்திற்கு என தனியாக கல்விக் கொள்கை அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு தேர்வுகளை கடந்து நிறைய பேர் படிக்க முடியாது. அதனால்தான் எதிர்க்கிறோம். எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறது. மத்திய பல்கலைக்கழகத்தில் கியூட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இளங்கலை பட்டங்களுக்கு நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. இதை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. அதனால் நாங்கள் வேண்டாம் என்கிறோம். கலைஞர் ஆட்சியில் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வை தூக்கி எறிந்தார். கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 25 ஆயிரம் பேர் மட்டும் பொறியியல் பயின்ற நிலையில், நுழைவுத் தேர்வு ரத்து செய்த பின்னர் 75 ஆயிரமாக இந்த எண்ணிக்கை உயர்ந்த்து.
நுழைவுத் தேர்வு காரணமாக, பிளஸ்-2 தேர்விற்காக படிக்காமல், நீட் தேர்வுக்காக பல லட்சம் செலவு செய்து படிக்கிறார்கள். கிராமத்தினருக்கு இந்த வசதி இல்லை. அதனால்தான் எதிர்க்கிறோம். இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். சமூக நீதி இடஒதுக்கீடு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இடஒதுக்கீட்டினை வேலைவாய்ப்பு, படிப்பில் சரியாக பின்பற்ற வேண்டும் என்பதற்ககாகவே சமூக நீதி கண்காணிப்புக்குழுவினை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். படித்த முடித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் மகளிருக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்ற அரசாணை பிறப்பித்தவர் கலைஞர். தமிழகத்தில் உயர்கல்வியின் வளர்ச்சிக்கு காரணம் திராவிட மாடல்தான் காரணம். படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றிமையக்கப்படுகிறது. அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசுக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 7.5 இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணம் கிடையாது. இது சாதாரண விஷயம் கிடையாது. பல ஏழைக் குடும்பங்களில் நகையை அடகு வைத்து பணம் கட்டி வருகின்றனர். அரசியல் மட்டுமல்ல, கலைத்துறை, இலக்கியத்துறையிலும் அவர் ஆற்றிய பணிகள் காரணமாகவே நிரந்தரமாக அவர் கலைஞர் என்ற பெயரைப் பெற்று இருக்கிறார். நான் முனைவர் பட்ட ஆய்வின் போது, திராவிட இயக்கம் என்ற தலைப்பில் ஆய்வு செய்தேன். 1980-களில் திராவிடம் என்ற சொல்லையே ஏற்காத நிலையில், இன்றைக்கு பல்கலைக்கழகங்களில் திராவிடவியல் நூலகம் திறக்கும் அளவிற்கு நிலைமை மாற்றமடைய திராவிட மாடல் ஆட்சியே காரணம். அமெரிக்காவில் நிறத்தின் அடிப்படையில் வேற்றுமை, இங்கு சாதி அடிப்படையில் வேற்றுமை நிலவியது” என்று பேசினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, ”பனிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வந்துவிட்டது, சிபிஎஸ்சிக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. எப்பொழுது வரும் தெரியவில்லை. அதற்காக கூடுதலாக ஐந்து நாட்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான நாட்களை நீடித்து உள்ளோம். குறிப்பாக எல்லாம் பல்கலைக்கழகத்திலும் விதிமுறைகளை பின்பற்ற அரசாணை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இடஒதுக்கீடு அனைத்து பல்கலைக்கழகத்திலும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பாக சுபவீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நேரடியாக சென்று சுப.வீரபாண்டியன் மேற்பார்வையிடுவார் என்றார். நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதைத்தான் நாங்களும் சொல்லி வருகிறோம். தனியார் நீட் பயிற்சி பள்ளிகள் பயன்பெறுவதற்காக தான், நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஒருவர் நீட் பயிற்சி பள்ளி நடத்தி ஏராளமான பணம் சம்பாதித்துள்ளார் என்று கூறினார்.