ஒன்றரை கோடி தொண்டர்கள் மனதில் ஓடுவது என்ன? அதிமுகவின் உண்மையான பிரச்சனை தான் என்ன?
அதிமுகவின் சரிவுக்கு யார் மீதாவது ஒரு நிர்வாகி குறை சொல்வாரே ஆனால், அது கண்ணாடியை பார்த்து பேசுவதற்கு சமம். காரணம், ஒவ்வொருவருக்கும் அதில் பங்கு இருக்கிறது.
ஒற்றைத் தலைமை கோரிக்கை அதிமுகவில் வலுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம், நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் என்கிறார்கள் அவரவர் ஆதரவாளர்கள். இதெல்லாம் உண்மையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இப்போது விசயத்திற்கு வருவோம், ‛இரட்டைத் தலைமையாக இருப்பதால், முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிக்கல் இருக்கிறது’ என்கிற ஒரு காரணத்தை வலுவாக முன்வைக்கிறது , இபிஎஸ்., ஆதரவு கூடாராம். அதிலும் உண்மை இருக்கலாம். ‛என்ன முடிவு எடுப்பதில் பிரச்சனை?’ என்று யோசித்தால், அதற்கு அவர்கள் தான் விடையளிக்க வேண்டும்.
பாஜகவும் காரணம்… எப்படி?
ஒட்டுமொத்தமாக அதிமுகவின் எதிர்கட்சி செயல்பாடு படுமோசம் என்பதை பாஜகவின் செயல்பாடோடு தான் ஒப்பிடுகின்றனர். பாஜக இறங்கி அடிக்கும் போது, அந்த அளவிற்கு அதிமுக இறங்கி அடிக்கவில்லை தான். ஆனால், அதற்கு ஓபிஎஸ் மட்டுமே பொறுப்பு என்பது எப்படி பொருத்தமாக இருக்கும் எனத் தெரியவில்லை. அறிக்கைகள் தனித்தனியாக வருவதாக கூறுகிறார்கள். இது ஆரம்பத்திலிருந்தே நடந்து வருவது தான். நேற்று நடந்ததைப் போல இதை ஒரு காரணமாக கூற முடியாது. சரி, ஒற்றைத் தலைமை அவசியம் என்பது அவர்களின் விருப்பம், அதில் பிறர் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், ஓபிஎஸ் மாற்றத்திற்கு இத்தனை காரணம் கூறும் போது, அதிமுகவின் சட்டமன்ற தோல்விக்கு ஒரு காரணம் கூட கற்பிக்கவில்லையே அது ஏன்?
மாஜி அமைச்சர்கள் மீது என்ன நடவடிக்கை?
அதிமுக ஆட்சியை இழந்ததில் ஆச்சரியமில்லை; மாஜி அமைச்சர்கள் பலர் தோற்றதில் தான் ஆச்சரியம். அதில் பெரும்பாலானோர் மாவட்ட செயலாளர்களாக இன்றும் உள்ளனர். 10 ஆண்டுகளாக அமைச்சர்களாக இருந்து, தங்கள் தொகுதியில் தனது வெற்றியை கூட தீர்மானிக்க முடியாத மாஜி அமைச்சர்கள், எப்படி அந்த மாவட்டத்தில் கட்சியை வளர்ப்பார்கள்? மாவட்டத்தில் பிற வேட்பாளர்களை ஜெயிக்க வைப்பார்கள்? அவ்வாறு தோற்றுப் போன மாவட்ட செயலாளர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்கிற கேள்வியை எழுப்புகின்றனர் குறிப்பிட்ட சில தொண்டர்கள். உண்மையில் அது தானே ஒருங்கிணைப்பாளராக, இணை ஒருங்கிணைப்பாளராக எடுத்திருக்க வேண்டிய முதல் நடவடிக்கை. தங்கள் பதவிக்காக , இந்த அடிப்படை நடவடிக்கையை கூட ஓபிஎஸ்-இபிஎஸ் எடுக்க முன்வராததால் தான், இன்று அதிமுகவிற்கு இந்த நிலை. குறைந்த பட்சம் தோல்விக்கான காரணங்களை கூட ஆராயமல், சுய பரிசோதனை செய்யாமல், ‛நீங்க எனக்கு ஆதரவு… நான் உனக்கு ஆதரவு’ என்பது போல அமைதியாக இருந்ததும், மிகப்பெரிய தவறாகவே பார்க்கப்படுகிறது.
அப்போது எங்கே போனது சீற்றம்!
தங்களின் மோசமான செயல்பாட்டால், தானும் தோல்வியுற்று, தான் சார்ந்த கட்சியும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பையும் கெடுத்த மாஜி அமைச்சர்கள், எந்த உரிமையில் ஓபிஎஸ்., மீது குறை கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. தங்கள் மீது ஆயிரம் குறைகள் இருக்கும் போது, தலைமையை மாற்றினால், எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவது, யாரை ஏமாற்ற அல்லது, யாரை குளிர்விக்க என்கிற கேள்வியையும் கட்சியின் மீது அக்கறை கொண்ட சிலர் கூறுகிறார்கள். இன்று சீற்றம் கொண்ட சிங்கமாய் கர்ஜிக்கும் மாஜிக்கள் சிலர், கடந்த தேர்தலில் தோற்று விட்டு, வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடந்தார்களே, அப்போது எங்கே போனது அவர்களது சீற்றம் என்றும் சில தொண்டர்கள் கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை.
யார் பக்கம் தான் நியாயம்!
ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதால் பெருங்கூட்டத்தின் செயல்பாடு சரியென்றோ, தனித்து நிற்பதால் ஓபிஎஸ் பரிதாபத்திற்குரியவர் என்றோ கூற முடியாது. காரணம், இருதரப்பிலும் அரசியல் இருக்கிறது. சேரும் போது ஒரு பேச்சு, விலகும் போது ஒரு பேச்சு என்பதை கடந்த காலத்திலும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஆட்சி இருக்கும் போது அனைத்தையும் ஆமோதித்து விட்டு, இப்போது ஆர்பாட்டம் செய்வது தான் கொஞ்சம் நெருடலாக உள்ளது.
ஓபிஎஸ் செய்த தவறு!
இதற்கு முன்பு செய்தியாளர்களை பார்த்தால் கை கூப்பிவிட்டு அங்கிருந்து நகரும் ஓபிஎஸ், இப்போது தனது அறையில் அமர்ந்து, அனைத்து ஊடகத்திற்கு தனித்தனி பேட்டி தருகிறார். தனக்கு ஒரு பிரச்சனை என வரும் போது, ஓபிஎஸ் இதை தான் ஒவ்வொரு முறையும் செய்கிறார். அதன் பின், மீடியாக்களை அவர் புறக்கணிப்பது புதிதல்ல. இதை ஒரு வித சந்தர்ப்பவாதமாகவும் கூறலாம். இப்படி எல்லா இடத்திலும் ஒதுங்கி நின்ற தவறு தான், இன்று ஒட்டுமொத்தமாக அவரை ஒதுக்க காரணமானது என்றால் அதிலும் உண்மை இருக்கிறது.
யார் பக்கம் அதிமுக!
அதிமுகவின் சரிவுக்கு யார் மீதாவது ஒரு நிர்வாகி குறை சொல்வாரே ஆனால், அது கண்ணாடியை பார்த்து பேசுவதற்கு சமம். காரணம், ஒவ்வொருவருக்கும் அதில் பங்கு இருக்கிறது. வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சகஜமானது. வெற்றி வரும் போது கொண்டாடுவதும், தோல்வி வரும் போது வெறுப்பு அரசியல் பேசுவதும், மோசமான அரசியல். அதை தான் இப்போது கையில் எடுத்திருக்கிறது அதிமுக. இது நிர்வாகிகளுக்குள் நடந்து கொண்டிருக்கும் பனிப்போர்; ஆனால் பாதிக்கப்படுவது ஒன்றரை கோடி தொண்டர்கள் என்பதை, ஓபிஎஸ்.,ம் உணரவில்லை, இபிஎஸ்.,ம் உணரவில்லை. யார் பக்கம் யார் இருக்கிறார் என்பதை விட, வெற்றி பக்கம் இருக்கிறோமா என்பதை தான் அரசியலின் அடிப்படை என்பார்கள்!