அக்னிபத் திட்டம்: ஆளுநர் ஆர்.என்.ரவியை சீண்டிய ப.சிதம்பரம்..!
அக்னிபத் திட்டம் தொடர்பாக, காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்து உள்ளார்.
ஹைலைட்ஸ்:
- அக்னிபத் திட்டம்
- ஆளுநர் ஆர்.என்.ரவியை சீண்டிய ப.சிதம்பரம்!
‘அக்னிபத்’ திட்டம் இன்று சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்னையாக உருவாகி விட்டதாக காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, அக்னிபத் என்ற ராணுவத்தில் சேரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில், ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். 4 ஆண்டுகள் பயிற்சி முடிந்த பிறகு, 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரப் பணியில் அமர்த்தப்படுவர். 75 சதவீத இளைஞர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.
4 ஆண்டுகளுக்கு இளைஞர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரம் ஆக்கப்படுவதால் மற்ற இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடும் என, கூறப்படுகிறது. இதனால் இந்தத் திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். மேலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளன.
இந்நிலையில், அக்னிபத் திட்டம் தொடர்பாக, காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்து உள்ளார். இது குறித்து சமூக வலைதளமான ட்விட்டரில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:
‘அக்னிபத்’ திட்டம் ஓர் அரசியல் முடிவு. இன்று சர்சைக்குரிய அரசியல் பிரச்னையாக உருவாகி விட்டது. இதில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுனர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. மேலும், உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் இளைஞர்களுக்குத் தவறான வழியைக் காட்டுகிறார்கள் என்று சொல்வது அறவே ஏற்புடையதல்ல. இந்தப் பிரச்னைக்கு அமைதியான போராட்டம் மூலமாகவும் விரிவான விவாதம் மூலமாகவும் தான் தீர்வு காண வேண்டும். இந்த விவாதத்தில் ஒரு மாநில ஆளுனர் பங்கேற்பதற்கு இடம் இல்லை.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
அக்னிபத் திட்டத்திற்கு ஆதரவாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துத் தெரிவித்து இருந்த நிலையில், ப.சிதம்பரம் இவ்வாறு கருத்துத் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.