‛அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறாரா ஓபிஎஸ்?’ ஆலோசனை கூட்டத்திற்குப் பின் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி!

நிர்வாகிகள் யாரும் சின்ன குழந்தைகள் அல்ல. அவர்களுக்கு எல்லாம் தெரியும். யாரையும் கட்டாயப்படுத்தி அழைக்க வேண்டிய அவசியம். ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்க வேண்டும்

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சற்று முன் நடந்தது. அதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 

‛‛கழகத்தை வழிநடத்த வேண்டும் என்கிற வகையில், எடப்பாடி பழனிச்சாமியை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 தலைமை கழக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். 4 பேர், வரவில்லை என்று கடிதம் கொடுத்துள்ளார்கள். பண்ருட்டி ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், புத்தி சந்திரன், ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் மருத்துவ காரணங்களால் பங்கேற்க முடியவில்லை என கடிதம் அனுப்பியுள்ளனர். இவர்களை தவிர பெரும்பான்மையானவர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.

இதில் வரும், 11.7.2022 ல் பொதுக்குழு கூட்ட அழைப்பிதழை தபாலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அது மட்டுமின்றி பல பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் சொல்ல வேண்டியதை சொல்கிறேன். சொல்ல முடியாததை சொல்ல முடியாது. 

முன்னாள் சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக சட்ட விதிகளை தெளிவாக கூறியுள்ளார். பிரிவு 20 அ7 ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாத சூழலில், கழகத்தை வழிநடத்த தலைமை கழக நிர்வாகிகள் அதிகாரம் படைத்தவர்கள். தெரிந்தும் தெரியாமல் இருக்கிறாரா, புரிந்தும் புரியாமல் இருக்கிறாரா, அறிந்தும் அறியாமல் இருக்கிறாரா ஓபிஎஸ் என்பது தெரியவில்லை. தூங்குபவரை எழுப்ப முடியாது. 

ஓபிஎஸ் பிளக்ஸ் போர்டு மாற்றும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து துரோகத்தின் அடையாளமாக அண்ணன் ஓபிஎஸ் உள்ளார். ஆரம்ப காலத்தில் இருந்து தான் சார்ந்த இயக்கத்திற்கு செய்திருக்கிற துரோகங்கள் நிறைய. இது குறித்து முன்னாள் அமைச்சர் உதயக்குமார் பேட்டியளித்துள்ளார். அப்படி இருக்கும் போது, அவரை எப்படி நமது அம்மா நாளிதழில் அவரது பெயரை வைத்திருக்க முடியும். உங்கள் கேள்விகளுக்கான அனைத்து கேள்விகளுக்கு வரும் 11 ம் தேதி பொதுக்குழுவில் பதில் கிடைக்கும். 

ஜெயலலிதா மறைவிற்குப் பின், நடந்தவற்றை எல்லாம் பாருங்கள். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், முதல்வர் ஸ்டாலினை பார்த்து அர்ப்பணிப்போடு ஆட்சி நடக்கிறது என்று கூறினால், எந்த தொண்டன் ஏற்பான்? பொருளாளர் பதவியில் நீடிப்பாரா, மாட்டாரா என்பதை பொதுக்குழு முடிவு செய்யும். நிர்வாகிகள் யாரும் சின்ன குழந்தைகள் அல்ல. அவர்களுக்கு எல்லாம் தெரியும். யாரையும் கட்டாயப்படுத்தி அழைக்க வேண்டிய அவசியம். ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்க வேண்டும் என்பது தான், ஒட்டுமொத்த கட்சியின் நிலைப்பாடும் கூட,’’

என்று அவர் செய்தியாளர்களிடம் பதிலளித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *