திண்டிவனம்: பட்டா பெயர் திருத்தம் செய்ய ரூ. 5,000 லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய எழுத்தர்!
திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம கணக்கில் பட்டா பெயர் திருத்தம் செய்வதற்கு 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் அருகே உள்ள ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (30). இவரது தாயார் கலைமணி என்பவருக்கு 2007ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம கணக்கில் மற்றும் வட்ட கணக்கில் திருத்தம் செய்ய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
இதனால் 2007 பதிவு எட்டில் திருத்தம் செய்ய அந்த ஆண்டிற்கான கணக்கை எடுத்துக் கொடுப்பதற்கு வட்டாட்சியர் அலுவலக பதிவறை எழுத்தர் சிவஞானவேலு (48), என்பவர் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து யுவராஜ் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் அளித்த பேரில், லஞ்ச ஒழிப்பு துறை மாவட்ட துணை கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான காவல் துறையினர் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் யுவராஜியிடம் ரசாயனம் தடவிய 5000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து பதிவறை எழுத்தர் சிவஞான வேலுவிடம் கொடுக்க அறிவுறுத்தினர்.
அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் 5000 ரூபாயை யுவராஜ் சிவஞானவேலுவிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சிவஞான வேலுவை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் இது சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா கிராம கணக்கில் திருத்தம் செய்வதற்காக 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் குறித்து புகார் செய்யும் விதம் :
ஊழல் குறித்து புகார் செய்யும் போது புகார்தாரர் தனது பெயரையும், முகவரியையும் தெளிவாகக் கூற வேண்டும். மத்திய அரசுத் துறை என்றால் மத்திய விழிப்புணர்வு ஆணையத்துக்கும், மாநில அரசுத் துறை என்றால் ஊழல் தடுப்பு இயக்குநருக்கும் புகார் செய்யலாம். ஒரு பொது ஊழியர் குறித்துப் பொய்யான புகார் தருவது இந்திய தண்டனைச் சட்டம் – பிரிவு 182 -இன் படி தண்டனைக்குரியது. பெயரில்லாத புகார்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஊழலில் சிக்கிய அதிகாரிகள் குறித்த தகவல்களை மத்திய விழிப்புணர்வு ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் தனித்தொகுப்பாக வெளியிட்டு வருகிறது. http://cvc.nic.in என்ற இணைய தளத்தில் இது குறித்த முழுமையான விவரங்கள் உள்ளன.