கதறியது முதல் கர்ஜித்தது வரை… யோகி ஆதித்யநாத் பிறந்தநாளில் அறியாத தகவல்கள் இதோ!

உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றி பெரிதும் வெளியில் தெரியாத தகவல்கள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.. 

இந்தியாவின் முக்கியமான தலைவர்களுள் ஒருவராக வலம் வருகிறார் உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத். பிரதமர் மோடிக்கு அடுத்த படியாக, பாஜகவில் பிரதமர் பதவிக்குத் தகுதி பெற்றவர் என அழைக்கப்படும் நபரான யோகி ஆதித்யநாத் நாட்டிலேயே அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் என்பது மட்டுமல்ல; கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் தனக்கென ஒரு கூட்டத்தையே வளர்த்து வருபவர்.

உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றி பெரிதும் வெளியில் தெரியாத தகவல்கள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.. 

தன் ஆன்மிக குரு மஹந்த் அவைத்யநாத்தின் தேர்தல் பிரசாரப் பணிகளின் மேற்பார்வையாளராக கடந்த 1996ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அரசியலில் களமிறங்கி பணியாற்றி வருகிறார் யோகி ஆதித்யநாத். மஹந்த் அவைத்யநாத் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த போது, யோகி ஆதித்யநாத்தைத் தனது வாரிசாகவும், அடுத்த மக்களவை தேர்தல் வேட்பாளராகவும் அறிவித்தார். 

தன்னை இந்து மதத்தின் காவலராக முன்னிறுத்தும் யோகி ஆதித்யநாத், இந்து மக்களிடம் மட்டுமின்றி தன்னை தலித் மக்கள் மத்தியிலும் பிரபலப்படுத்த பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறார். 

கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக நீண்ட காலமாக பதவி வகிக்கும் யோகி ஆதித்யநாத் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் நகரத்தில் உள்ள பிரபலமான கோரக்நாத் கோயிலின் தலைமை குருவும் ஆவார். 

கடந்த 1998-ஆம் ஆண்டு, தனது 26வது வயதில் கோரக்பூர் எம்.பியாக வென்ற யோகி ஆதித்யநாத் அப்போது நாடாளுமன்றத்திற்கு மிகக் குறைந்த வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டவராகக் கருதப்பட்டார். மேலும், தான் போட்டியிடத் தொடங்கியது முதலே, அவர் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். 

கடந்த 2002ஆம் ஆண்டு, `ஹிந்து யுவ வாஹிணி’ என்ற வலதுசாரி அமைப்பு ஒன்றைத் தொடங்கினார் யோகி ஆதித்யநாத். பசு பாதுகாப்பு, `லவ் ஜிஹாத்’ முதலான விவகாரங்களில் அதீத வன்முறையைப் பயன்படுத்துவதாக இந்த அமைப்பின் தொண்டர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சிறுபான்மையினரை மதம் மாற்றும் நோக்கில், கடந்த 2005ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத் நடத்திய `கர் வாபசி’ சுத்திகரிப்பு நிகழ்ச்சியில் பலரும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர். 

யோகி ஆதித்யநாத்தின் இயற்பெயர் அஜய் குமார் பிஷ்ட். உத்தரப் பிரதேசத்தின் ஹெச்.என்.பி கர்வால் பல்கலைக்கழகத்தில் கணிதப் பாடத்தில் இளங்கலை பட்டம் பயின்றுள்ள இவர்,  மேடைகளில் மக்களைத் தூண்டும் விதமாக வீராவேசமாக உரையாற்றுவதற்காக பெரிதும் கவனிக்கப்படுபவர். எனினும் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடத்திய போது, தனக்கு நெருக்கடி வழங்குவதாக அப்போது நாடாளுமன்றத்தில் யோகி ஆதித்யநாத் கதறி அழுதது இன்றும் பேசப்படுகிறது.

யோகி ஆதித்யநாத் மீது கொலை முயற்சி, வழிபாட்டு இடங்களை அவமதிப்பது, பயங்கர ஆயுதங்களுடன் கலவரங்களில் ஈடுபடுவது, கொலை மிரட்டல் முதலான குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *