ஆபத்தான பாறையில் ஏறி செல்ஃபி; கன்னியாகுமரி பீச்சில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை..!
சன்செட் பாய்ன்ட் அருகே கடற்கரையில் உள்ள ஆபத்தான பாறையில் ஏறி செல்ஃபி எடுக்கும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வேண்டும்.
கன்னியாகுமரி சன்செட் பாய்ன்ட் அருகே கடற்கரையில் உள்ள ஆபத்தான பாறையில் ஏறி செல்ஃபி எடுத்து ஆட்டம் போடும் இளைஞர்கள், ராட்சத அலையையும் பொருட்படுத்தாமல் ஆபத்தை உணராமல் ரிஸ்க் எடுக்கும் நபர்களை தடுக்கும் வகையில் கடற்கரை பகுதிகளில் ஆபத்து என்ற எச்சரிக்கை பலகை அமைக்கவும் பாதுகாவலர்கள் அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் சூரியன் உதயம் மற்றும் மறைவு ஆகியவற்றை காண முடியும். இதற்காகவே நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் கூட ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவதுண்டு. அப்படி வருகை தரும் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் ஆனந்தமாக குளியல் இட்டு தங்களது நேரத்தை செலவழிப்பது வழக்கம். கடற்கரையில் அமைந்துள்ள பாறைகளில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் மிகுதியால் ஏறி நின்று செல்பி எடுப்பதும், பாறையின் மீது ஏறி செல்வதால் வழுக்கி விழுந்து உயிர் சேதம் ஏற்படுவதும் அதிகரித்ததை தொடர்ந்து ஆபத்தான பாறைகளில் அபாயம் என எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது பெயர் அளவில் மட்டுமே அந்த எச்சரிக்கை செயல்பட்டு வருகிறது. சூரியன் அஸ்தமனமாகும் இயற்கை அழகு காட்சியை காண கோவளம் பகுதியில் உள்ள சன்செட் பாயிண்ட் கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
அப்படி வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குளிப்பதும் பாறைகளில் நின்று செல்பி எடுப்பதும் அதிகரித்து வருகிறது. தற்போது குமரி கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பாறை மீது ஏறுவது மிகவும் ஆபத்தான செயலாக உள்ளது. இதனை தடுக்கவோ அல்லது ஆபத்து என எச்சரிக்கை செய்யவும் அறிவிப்பு பலகை எதுவுமே அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று கடற்கரையில் உள்ள பாறை மீது மூன்று இளைஞர்கள் ஏறி நின்று ராட்சத அலைகளை கூட பொருட்படுத்தாமல் செல்ஃபி எடுத்து ஆட்டம் போட்டனர். ஏற்கெனவே பல முறை இது போன்று பாறையில் நின்றவர்கள் ராட்சத அலை அடித்து உயிரிழந்துள்ள நிலையில் ஆபத்தை உணராமல் பாறையில் ஆட்டம் போட்டனர். ராட்சத அலையையும் பொருட்படுத்தாமல் ஆபத்தை உணராமல் ரிஸ்க் எடுக்கும் நபர்களை தடுக்கும் வகையில் கடற்கரை பகுதிகளில் ஆபத்து என்ற எச்சரிக்கை பலகை அமைக்கவும் பாதுகாவலர்கள் அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.