‘நான் ரெடி நீங்க ரெடியா?’ இ.பி.எஸ்.க்கு நேரடியாக கடிதம் எழுதிய ஓ.பி.எஸ்..!

அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், அவரது ஆதரவாளரான எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியன் நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது, அவர் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார் என்றும், உள்ளாட்சி இடைத்தேர்லில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி சின்னத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த படிவத்தில் கையெழுத்து இட ஓ.பன்னீர்செல்வம் தயார் என்றும், எடப்பாடி பழனிசாமி தயாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த படிவத்தில் அவர் கையெழுத்து இடாவிட்டால் உண்மையான தொண்டர்கள் யார் என்பதை தொண்டர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் கூறினார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காலியாக உள்ள இடங்களுக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 9-ந் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனடிப்படையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி மன்றத்தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர்கள், 2 நகராட்சி கவுன்சிலர்கள், 8 பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட 510 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் சின்னங்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்து கையெழுத்து இட்டால் மட்டுமே செல்லும் என்ற சூழல் உள்ளது. ஆனால், அ.தி.மு.க.வில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளதால் அந்த படிவங்களில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து இடாமல் இருந்து வந்தனர்.

 உள்ளாட்சித் தேர்தலுக்கான படிவத்தை சமர்ப்பிக்க நாளையே மறுநாள் என்பதால், இவர்கள் இருவரும் கையெழுத்து இடாவிட்டால் அ.தி.மு.க.வினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி எடப்பாடி ஆதரவாளர்கள் அடுத்த பொதுக்குழுவை கூட்டியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களின் மேல் அக்கறை என்னும் புள்ளியில் சவால் விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *