26/11 பயங்கரவாத தாக்குதலுக்கும் உதய்ப்பூர் படுகொலைக்கும் தொடர்பு இருக்கிறதா? வெளியான திடுக் தகவல்கள்

கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் அக்தாரி, தனது மோட்டார் சைக்கிளுக்கு 2611 என எழுதப்பட்ட நம்பர் பிளேட்டைப் பெற கூடுதல் பணம் கொடுத்திருக்கிறார்.

உதய்பூர் கொலையாளிகளுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுவுடன் தொடர்பு இருப்பதாக ராஜஸ்தான் காவல்துறை தகவல் வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு, போலீசார் இன்று இந்த வழக்கில் மற்றொரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளனர். கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் அக்தாரி, தனது மோட்டார் சைக்கிளுக்கு 2611 என எழுதப்பட்ட நம்பர் பிளேட்டைப் பெற கூடுதல் பணம் கொடுத்திருக்கிறார்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற தேதியுடன் மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட் எண்ணை காவல்துறையினர் தொடர்புபடுத்தியுள்ளனர். கொலையாளிகளான கோஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தாரி ஆகியோர் தையல்காரர் கன்னையா லாலின் கழுத்தை கொடூரமாக அறுத்துவிட்டு தப்பிக்கப் பயன்படுத்திய அதே வாகனம்தான் இது.

RJ 27 AS 2611 என்ற பதிவு எண் கொண்ட இந்த பைக் இப்போது உதய்பூரில் உள்ள தன் மண்டி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரியாஸ் வேண்டுமென்றே 2611 என்ற எண்ணைக் கேட்டுள்ளார். இந்த நம்பர் பிளேட்டுக்கு கூடுதலாக 5,000 ரூபாய் கொடுத்துள்ளார் என போலீஸ் வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன. 

இந்த கொடூர கொலை குற்றம் மற்றும் போடப்பட்ட திட்டம் குறித்து தற்போது கிடைத்துள்ள ஆதாரங்கள் பல சந்தேகங்களை தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டிலேயே ரியாஸ், தனது மனதில் என்ன நினைத்து கொண்டிருந்தார் என்பதற்கான துப்பு இந்த நம்பர் பிளேட்டாக இருக்கலாம் என்று போலீசார் நம்புகிறார்கள்.

கடந்த, 2014ஆம் ஆண்டு, ரியாஸ் நேபாளத்திற்குச் சென்றிருப்பது அவரின் பாஸ்போர்ட் தெரியவந்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் இருப்பவர்களை, போன் மூலம் தொடர்பு கொண்டிருப்பது அவரின் தொலைபேசி அழைப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. பட்டப்பகலில் கன்னையாலாலைக் கொன்றுவிட்டு, இப்போது உதய்பூரில் உள்ள காவல்நிலையத்தில் கிடக்கும் இந்த பைக்கில் கொலையாளிகள் இருவரும் தப்பிச் சென்றனர்.

உதய்பூரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜ்சமந்த் மாவட்டத்தில் போலீஸ் பிடித்த போது, ​​இந்த பைக்கில்தான் அவர்கள் இரண்டு பேர் தப்பிச் செல்ல முயன்றனர். ரியாஸ் அக்தாரி 2013ஆம் ஆண்டு, எச்டிஎப்சி வங்கியிடம் கடன் வாங்கி பைக்கை வாங்கியதாக வட்டார போக்குவரத்து அலுவலக (RTO) பதிவுகள் சுட்டுகாட்டுகின்றன. வாகனத்திற்கான இன்சூரன்ஸ் 2014 மார்ச்சில் காலாவதியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *