இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா..! ரசிகர்கள் அதிர்ச்சி..!
இந்திய கேப்டன் ரோகித்சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பு வகிப்பவர் ரோகித்சர்மா. இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மற்றும் ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ரோகித்சர்மா தலைமையில் இங்கிலாந்து சென்றுள்ளது. ஜூலை 1-ந் தேதி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், இந்திய கேப்டன் ரோகித்சர்மாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பால் ரோகித் சர்மா பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்தாண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி கொரோனா காரணமாக கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடுவது மட்டும் ரத்தாகியது. இதையடுத்து, இந்த போட்டி தற்போது மீண்டும் அட்டவணைப்படுத்தப்பட்டு வரும் ஜூலை 1-ந் தேதி பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் நகரில் விளையாட உள்ளது.
இதற்காக ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. அங்கு லீசெஸ்டர்ஷையர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆடி வருகிறது. அங்கு பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் ஆடி வருகிறது. இந்த சூழலில்தான் இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக லீசெஸ்டர்ஷையர் அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய கேப்டன் ரோகித்சர்மா இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்யவில்லை. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கேப்டன் ரோகித்சர்மா ஹோட்டலில் உள்ள அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை இந்திய அணியின் மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கொரோனாவால் இந்திய கேப்டன் ரோகித்சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏற்கனவே காயத்தால் கே.எல்.ராகுலும் ஆட முடியாத சூழல் ஏற்பட்டு விலகியுள்ளார். ரோகித்சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் ஆடாவிட்டால் அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ரிஷப்பண்ட் ஏற்பாரா? அல்லது விராட் கோலி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்பாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.