மாற்றுவழியில் காங்கிரஸ்! அக்னிபாத் திட்டத்தை திரும்பபெற தீர்மானம்! ராஜஸ்தான் அமைச்சரவை அதிரடி…
ஜெய்ப்பூர்: அக்னிபாத் திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை கைவிடக்கோரி எதிர்க்கட்சியினரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் ராஜஸ்தானில் ஆட்சி செய்யும் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை அக்னிபாத் திட்டத்தை திரும்பெறக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைக்கும் ஆள்சேர்க்கும் புதிய திட்டமான அக்னிபாத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜூன் 14ல் அறிவித்தார்.
அதன்படி 4 ஆண்டுகள் வரை குறுகிய காலமாக இளைஞர்கள் பணி செய்ய முடியும். அதன்பிறகு 25 சதவீதம் பேர் மட்டுமே தக்கவைக்கப்பட்டு 75 சதவீதம் பேர் திருப்பி அனுப்பப்படுவார்கள். இவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. பணபலம் மட்டும் வழங்கப்படும்.
இளைஞர்கள் போராட்டம் இதற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பீகார், உத்தர பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் போராட்டம் உருவாகி வன்முறை வெடித்தது. இன்றும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதனால் இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு திட்டத்தை கைவிட மறுத்துள்ளது. தொடர்ச்சியாக சில சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது வயது தளர்வு மற்றும் அக்னிபாத் பணியில் சேர்ந்தோருக்கு பாதுகாப்புத்துறை, மத்திய உள்துறை படைகளில் இடஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் தீர்மானம் இந்நிலையில் தான் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக்கோரி ராஜஸ்தான் அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழை ஆள்சேர்ப்பு முறையை பின்பற்ற… இதுதொடர்பாக மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘இளைஞர்கள் மத்தியில் பெருத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ள இந்த திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேலும் ராணுவத்தின் எதிர்காலம் மற்றும் வீரர்களின் குடும்பங்களை கருத்தில் கொண்டு ஆள்சேர்ப்பில் பழைய முறையை பின்பற்ற வேண்டும் என கூறுகின்றனர். மேலும் இதனை செயல்படுத்தும் முன் அனைத்து தரப்பிலும் ஆலோசித்து இருக்க வேண்டும். இதனால் அக்னிபாத் திட்டத்தை திரும்பெறக்கோரி மாநில அமைச்சரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ராஜஸ்தானிலும் தீவிர போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ராணுவத்தில் ராஜஸ்தானில் எவ்வளவு பேர்? 2015 முதல் ராணுவத்தில் அதிகபட்சமாக பஞ்சாப், ஹரியானா, பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து 186,795 பேர் ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மொத்தம் 3,08,280 பேர் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நிலையில் 1,86,795 பேர் அதாவது 60 பங்கு இந்த 8 மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2019-2020ல் இந்திய ராணுவத்துக்கு மொத்தம் 80,370 பேர் தேர்வான நிலையில் ராஜஸ்தானில் இருந்து 6887 பேரும், 2018-19ல் மொத்தம் 53,431 பேர் தேர்வான நிலையில் ராஜஸ்தானில் இருந்து 4172 பேரும் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தனர். இந்நிலையில் தான் ராஜஸ்தான் அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.