ஹைதராபாத்தின் பெயர் மாற்றப்படுகிறதா? பாஜக போடும் திட்டம்…கேசிஆருக்கு நெருக்கடி

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, பிரதமர் மோடி பேசியவை தற்போது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. நாடு முழுவதுமிருந்து வந்திருந்த பாஜகவினர் மத்தியில் பேசிய மோடி, தெலங்கானா தலைநகரை பாக்யநகர் எனக் குறிப்பிட்டார்.

பாக்யநகரில்தான் சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் படேல் “ஏக் பாரத்” என்ற வார்த்தையை முதல்முதலாக பயன்படுத்தினார் என பிரதமர் மோடி கூறினார். இதுகுறித்து விளக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “ஹைதராபாத் தான் பாக்யாநகர்.

இது நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் மோடி கூறினார். சர்தார் படேல் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு அடித்தளமிட்டார். இப்போது அதை மேலும் முன்னெடுத்துச் செல்வது பாஜகவின் பொறுப்பு” என்றார்.

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் மற்றும் பல பாஜக தலைவர்கள் ஹைதராபாத்தின் பெயரை பாக்யநகர் என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஹைதராபாத்தின் பெயர் பாக்யநகர் என மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும். அமைச்சரவை சகாக்களுடன் சேர்ந்து முதலமைச்சர் முடிவு செய்வார்” என்றார்.

செயற்குழு கூட்டத்தை ஹைதராபாத்தில் நடத்த வேண்டும் என்ற பாஜகவின் முடிவு ஒப்பிட்டளவில் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற செய்தியையே குறிக்கிறது. 2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, டெல்லிக்கு வெளியே கட்சியின் முக்கிய தேசிய கூட்டத்தை நடத்துவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன் 2017ல் ஒடிசாவிலும், 2016ல் கேரளாவிலும், 2015ல் பெங்களூரிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டிருந்தது.

2020 ஆம் ஆண்டு, ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலின் போது பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “ஹைதராபாத்தின் பெயரை பாக்யநகராக மாற்ற” பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *