கோப்ரா திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உதயநிதி
டான், விக்ரம் திரைப்படங்களைத் தொடர்ந்து கோப்ரா திரைப்படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றினார் உதயநிதி ஸ்டாலின்.
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது கோப்ரா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். லலித்குமார் தயாரித்திருக்கும் அந்த படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கான பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கின. ஆனால் கதையில் சில மாற்றங்களையும் இயக்குநர் அஜய் ஞானமுத்து அவ்வப்போது செய்தார். அதன் காரணமாக படபிடிப்பு நீண்டுகொண்டே சென்றது.
இதனால் தயாரிப்பாளர் மற்றும் அஜய் ஞானமுத்து இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை மறுத்த அஜய் ஞானமுத்து, இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
தற்போது கோப்ரா திரைப்படத்தின் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இதனால் ஆகஸ்ட் 11ஆம் தேதி கோப்ரா படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர் லலித் சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கும் கோப்ரா படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. சமீபத்தில் வெளியான டான், விக்ரம் உள்ளிட்ட படங்களை அந்த நிறுவனம் வெளியிட்டது
இந்த நிலையில் வரும் 1ஆம் தேதி மாதவன் நடித்த ராக்கெட்ரி மற்றும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் கோபுர ஆகிய படங்களின் வெளியீட்டையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஏற்றுள்ளது. அதேபோல் இந்த திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமமும் கலைஞர் டிவிக்கு விற்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.