பிரதமர் மோடியை தேடி வந்து கை குலுக்கிய அமெரிக்க அதிபர் பைடன்! வீடியோ
ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 மாநாடு, ஜெர்மனியின் எல்மாவ் மலைப்பகுதியில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பருவநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் சுகாதாரத்தில் சிறப்பான எதிர்காலத்துக்காக முதலீடு என்ற தலைப்பிலும், உணவு பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவம் என்ற தலைப்பிலும் நடைபெற்ற அமர்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த மாநாட்டின் இடையே, ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கால்ஸுடன் பிரதமர் பேச்சு நடத்தினார். அப்போது, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயேன் ஆகியோரையும் நரேந்திர மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்தபோது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-வுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த இடத்துக்கு வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மோடியுடன் பேசவந்தார். கனடா பிரதமருடன் பேசிக்கொண்டிருந்த மோடி இதை கவனிக்கவில்லை. உடனே பிரதமர் மோடியின் தோளை தட்டிய பைடன், அவருடன் கைகுலுக்கி பேசினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். அப்போது, முன்னாள் அதிபர் ஷேக் கலீஃபா மறைவுக்கு தற்போதைய அதிபர் ஷேக் முகமது-விடம் இரங்கல் தெரிவிக்க உள்ளார். மேலும், இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்திவிட்டு இந்தியா புறப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.