நடிகை சாய் பல்லவிக்கு விஜயசாந்தி அட்வைஸ்…

இரக்கத்துடன் நடந்துகொள்ளுங்கள்.ஒடுக்கப்பட்வர்களுக்கு ஆதரவு அளியுங்கள் என எல்லா நல்ல மனிதர்களும் சொல்வதைதான் சாய் பல்லவியும் சொல்லியிருக்கிறார்

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை சாய் பல்லவி தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் ராணாவுடன் நடித்துள்ள விராட் பர்வம் என்ற திரைப்படம் நேற்று வெளியானது. நக்சலைட் இளைஞருடன் ஒரு இளம் பெண் காதல் கொண்ட ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தில் நடித்த அனைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலயில், விராட் பர்வம் படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை சாய் பல்லவி கூறுகையில்

காஷ்மீரில் அந்த காலத்தில் பண்டிதர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பேசுகிறது. அதேபோல் மத முரண்களை பிரச்சினையாக எடுத்துக்கொண்டால், சமீபத்தில் பசுக்களை வாகனத்தில் ஏற்றிச் சென்ற முஸ்லீம் இளைஞரை தாக்கி ஜெய் ஸ்ரீராம் என்று முழங்க கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சாய் பல்லவியின் இந்த கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் இந்த கேள்விக்கு எதிரான பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த அகில் என்பவர் சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஐதராபாத் சுல்தான் பஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் சாய் பல்லவிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் மக்களைவை உறுப்பினரும், நடிகையுமான திவ்யா ஆதரவு கருத்தை தெரிவித்துள்ளார். இதில், இரக்கத்துடன் நடந்துகொள்ளுங்கள்.ஒடுக்கப்பட்வர்களுக்கு ஆதரவு அளியுங்கள் என எல்லா நல்ல மனிதர்களும் சொல்வதைதான் சாய் பல்லவியும் சொல்லியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

ஆனால் சாய் பல்லவிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நடிகையும் மாநிலங்களவை உறுப்பினருமான விஜயசாந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பசுக்கள் கொல்லப்படுவதும், காஷ்மீர் பண்டிதர்கள் கொல்லப்பட்டதும் ஒன்றல்ல. நீ சற்று சிந்தித்து பார்த்தால், உண்மை புரியும். ஒரு தாய் தவறு செய்த தனது மகனை அடிப்பதையும், ஒரு திருடனை திருடியதற்காக அடித்ததும் எப்படி ஒன்றாகும்? இந்த பிரச்சினை குறித்து முழுமையாக தெரியாவிட்டால் கருத்து சொல்லாமல் ஒதுங்கியிருப்பது நல்லது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *