உத்தவ் தாக்கரே ராஜினாமாவுக்கு பின், மகாராஷ்டிராவில் நடக்கப்போவது என்ன?
மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீர் திருப்பமாக நேற்று முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டிருந்தார். இந்தச் சூழலில் நேற்று இரவு திடீரென்று உத்தவ் தாக்கரே தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக அவர், “மகாராஷ்டிரா முதலமைச்சராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு ஆதரவாக இருந்த தேசியவாத கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எனது நன்றி. நான் எப்படி முதல்வராக வந்தேனோ அதேபோல் தற்போது வெளியே செல்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த நடக்க போவது என்ன?
மீண்டும் பாஜக ஆட்சி?
மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராகும் வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் சிவசேனா கட்சியிலுள்ள 39 அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும். தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்று கருதப்படுகிறது.
2019 சட்டப்பேரவைத் தேர்தல்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவை இடங்கள் உள்ளன. அதில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 105 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சை உள்ளிட்ட மற்றவைகள் 27 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்பட்டது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து 152 சீட்டுகளுடன் ஆட்சி அமைத்தன. பாஜக 105 இடங்களை பிடித்து தனிப் பெரும் கட்சியாக இருந்தது. 13 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருந்தனர்.
எனவே தேவேந்திர ஃபட்னாவிஸ் 39 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை பெரும் பட்சத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியும். ஆகவே ஏக்நாத் சிண்டே மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பதவியேற்கும் வாய்ப்பும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின் பாஜக-சிவசேனா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.