திருப்பூரில் சீரழியும் மாணவர்கள்; 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் – கடைக்காரர் கைது ..!

விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம், சின்னக்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இதனிடையே வட மாநிலத் தொழிலாளர்கள் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை அதிகமாக பயன்படுத்தி வருவதால், அந்தப் பொருட்கள் விற்பனை அந்தப் பகுதிகளில் ஜோராக நடைபெற்று வருகிறது. அதேபோல பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி மாணவர்களை கவரும் வகையில், ஊசி வடிவிலான சாக்லேட்கள், சிகரெட் வடிவ சாக்லேட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பலமுறை காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், முழுமையாக தடுக்க முடியவில்லை. தொடர்ந்து போதை பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது.

இந்நிலையில் பல்லடம் அருள்புரம் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு போதை சாக்லேட்டுகள் சப்ளை செய்யப்படுவதாக பல்லடம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் பல்லடம் காவல் துறையினர் அருள்புரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்லடம் அருகே உள்ள குங்குமம்பாளையம் பிரிவிலுள்ள பெட்டிக் கடை ஒன்றில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்ட போது, அங்கே விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்கள் என்னும் போதை சாக்லேட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கடையின் உரிமையாளரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த விஜய் மகந்தி (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த 9 இலட்சத்து 58 ஆயிரத்து 700 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். போதைப் பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து காவல் துறையினர் கைது செய்யப்பட்ட,மகந்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்யப்பட்ட சிகரெட் வடிவ சாக்லேட்கள், ஊசி வடிவ சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *